குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.பல்கலை கழக மாணவர்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியின் எந்த அரசியல் காரணமும் இல்லை என அனைத்து பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.பல்கலைகழக கலைப்பீட 4 ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னால் எந்த அரசியல் காரணிகளும் இல்லை. மாணவர்களின் மோதலின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டு என சில தவறான கருத்துக்கள் வெளி வருகின்றன. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. தேர்தல் காலம் என்பதனால் வேறு பிரச்சனையாக மாணவர்களின் மோதல் சம்பவத்தை திசை திருப்ப சிலர் முயற்சி செய்கின்றனர். மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே மோதலுக்கு காரணம்.
தற்போது மோதல் தொடர்பில் பல்கலை கழக நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை இராமநாதன் நுண்கலைப்பீடம் , சட்டத்துறை மற்றும் 1ஆம் , 2ஆம் வருட கலைபீட மாணவர்களுக்கான விரிவுரைகள் நடைபெறுகின்றன. மோதலில் ஈடுபட்ட கலைப்பீட 4ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்பு தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன் , பல்கலை கழக வளாகத்தினுள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என தெரிவித்தார்.