முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக, ராஜபக்ஸ குடும்பத்தினரே சதி செய்து வருவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் லாபமீட்டும் நோக்கில் கோதபாயவை கைது செய்வதற்கான சதி முயற்சிகளை ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சொந்த சகோதரரையே அவர்கள் இவ்வாறு நடாத்துகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சதித் திட்டம் இருப்பதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிசால சிறிசேன, கோதபாயவிற்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்த சதித்திட்டம் காரணமாகவே கோதபாய வெளிநாட்டுக்கு சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவெளை, இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டுமெனவும் குற்றச்சாட்டு பொய்யாகவிருந்தால் பொய்ப் பிரச்சாரம் செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.