போகி புகை மற்றும் அடர் பனிமூட்டத்தினால் சென்னையில் இன்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு சென்ற 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், எழும் கடும் புகையானது காற்றை மாசுபடுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, கடும் புகை மண்டலமாக சென்னை காட்சி அளிக்கிறது. மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் உள்ளது. இந்த பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது. ஓடுபாதையும் தெரியவில்லை. இதனால் இன்று அதிகாலை முதல் சென்னையில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் புறப்படவில்லை.
லண்டனில் இருந்து இன்று அதிகாலையில் சென்னை சென்ற விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.