குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தற்போதைய பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு பதிலாக புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய நல்லாட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 43 உறுப்பினர்கள் தயார் நிலையில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமாயின் புதிய பிரதமர் ஒருவரின் கீழ் ஆட்சி அமைக்க வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அற்ற கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.