அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் அவருக்கு முதன் முறையாக மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது.
டிரம்பை பரிசோதித்த மருத்துவர் ரோனி ஜாக்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 71 வயதான டிரம்பிற்கு மூன்று மணி நேரம் நடைபெற்ற பரிசோதனை சிறந்த முறையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ராணுவ மருத்துவர்கள் மேற்கொண்ட இந்த பரிசோதனையின் மேலும் சில விவரங்கள் செவ்வாய்கிழமை அன்று வெளியிடப்படும் என்றும் ரோனி தெரிவித்தார்.
ஜனாதிபதி டிரம்பிற்கு மனநல பரிசோதனைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. ஆனால், சமீபத்தில் அவர் குறித்து வெளியான புத்தகம் அவரின் மனநல ஆரோக்கியம் தொடர்பான சர்ச்சையை கிளப்பியது. மைக்கேல் வோல்ஃப் எழுதிய `Fire and Fury: Inside the Trump White House` என்ற புத்தகத்தில், வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் டிரம்பை ஒரு குழந்தை போல பார்ப்பதாக கூறப்பட்டது. புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என ஜனாதிபதி டிரம்ப் மறுத்து வந்தார்.
இந்நிலையில், மேரிலான்டில் உள்ள வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்கள் டிரம்பை பரிசோதித்தனர். அதில் டிரம்பின் அதிகாரப்பூர்வ மருத்துவர் ரோனி ஜாக்சன் ஆவார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவராகவும் இவர் பணியாற்றினார். – (பிபிசி)