டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு நாளைய தினம் உச்சநீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட உள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு தொடரப்பட்டு பொதுமக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு, டெல்லி அரசு பிரதிநிதிகள் நாளையதினம் விசாரணையின் போது சமூகமளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டுக்கு தீர்வு காணும் நோக்குடன் 25 விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இவை அனைத்தும் அவசரகால நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில்தேவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தியதனைத் தொடர்ந்து அனில்தேவே இன்று சுற்றுச்சூழல் நிபுணர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.