குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 10ம் திகதியுடன் ஆரம்பமாகும் ஒரு மாத காலத்திற்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் வரவு செலவுத்திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஏதேனும் ஓர் தேவைக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் என்றாலும் அது குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் அது தொடர்பில் பிரதமரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரிடமும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி அல்லது ஜனாதிபதி செயலகத்திடமும் அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் வேளையில் அமர்வுகள் பூர்த்தியாகும் வரையில் அவையில் இருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.