தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட விஜய்மல்லையா மற்றும் லலித்மோடியை இங்கிலாந்து இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது. இந்தியாவிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதும் மத்திய அரசு கைது செய்து முறைப்படி வழக்கு விசாரணையை சந்தித்து தண்டனை அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங் பிஷர் விமான நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் இருந்தும் பெற்ற 9000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது வங்கிகள் மோசடி வழக்குகள் தொடர்ந்தன.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றில் நடந்து கொண்டு இருந்த போது விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதால் லண்டனில் தங்கி இருக்கும் அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கப் பிரிவு பல முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காததால் அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு அவரது கடவுச்சீட்டும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா சென்றுள்ள நிலையில் அவரிடம் விஜய் மல்லையாவைஇந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும், பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது இந்தியா-இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாட்டு அரசிடம் ஒப்படைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்
இது தொடர்பாக இரு நாடுகளிலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் விவகாரத்தை கவனித்து வரும் இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்துப் பேச உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் லண்டனில் தலைமறைவாகி இருக்கும் விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பல ஆயிரம் கோடி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு லலித் மோடியும் லண்டனில் தலைமறைவாகி உள்ளதால் இருநாட்டு பிரதமர்களிடையேயான பேச்சுவார்த்தை மூலம் அவரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவவர் என தெரிவிக்கப்படுகின்றது.