தீபிகா படுகோன் நாயகியாக நடித்த பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களால் இந்தியாவின் வடமாநிலங்களில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு பத்மாவத் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது’ என்று மத்தியப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. ஆனால் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததால், திரைப்படம் இன்று வெளியானது. இதனால் நேற்று முதலே மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.
பீகாரில் MOTIHARI என்ற பகுதியில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது படத்தின் பதாகைகள் எரிக்கப்பட்டதால் இயல்புநிலை பாதித்தது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் அமைப்பினருக்கும், பொலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு முன் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டகாரர்கள் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை பொலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேவேளை, மும்பையில் இத் திரைப்படம் எவ்வித எதிர்ப்பும் இன்றி திரையிடப்படடுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையில் பொலீசார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளதால் படம் திரையிடுவதில் சிக்கல் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.