ஐஸ்வர்யா ராய் பிளாஸ்றிக் அழகி எனவும், தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி எனவும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியாகியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பத்மாவத் படம் பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் திரைப்படம் குறித்த தன் பார்வையை பதிந்துள்ளார்.
“சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. திரையின் ஒவ்வொரு பிரைமையும் பன்சாலியும் சுதீப் சட்டர்ஜியும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்கள்.”
“ஒரு ஓவிய கண்காட்சியை கண் கொள்ளாமல் பார்த்தது போன்ற அற்புதமான அனுபவம். தீபிகா படுகோனே இந்தியாவின் அத்தனை அழகையும் ஒருங்கமைவு செய்த பேரழகி. தீபிகாவின் ஒவ்வொரு அசைவுகளும் அழகுடன் அபிநயம் பிடிக்கிறது.”
“ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி. தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி. வேட்டையாட துடிக்கும் பேரழகு. ரன்வீர் சிங் அத்தனை நயங்களை நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளார். ஒளிப்பதிவிலும் இயக்கத்திலும் இது நேர்த்தியான உன்னத படைப்பு.”
ஒரு ஒளிப்பதிவும் (ஷாட்டும்) அடுத்த ஒளிப்பதிவும் (ஷாட்டும்) எத்தனை நளினமாக அழகியலுடன் எடுக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தின் ஒளி சிதறல்களை சுதீப் சட்டர்ஜீ மிக அற்புதமாக அமைத்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் திரைப்படம் பார்த்தேன். ஆக மொத்தம் பேரனுபவம் என தெரிவித்துள்ளார் வசந்த பாலன்.