இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த, சதீஷ், ஜாலியாத் சுமித்தா தம்பதிகளின் மனளான 12 வயதுடைய மாணவி சுதேசா, 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடி கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இணைந்துகொண்டார். இவர் டுபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பாடசாலையில் 7-ம் வகுப்பில் பயின்று வருகிறார்.
பாடசாலையில் இடம்பெறும் பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு ஆங்கில மொழி பாடல்களை பாடி ஏராளமான பரிசுகளை பெற்றிருக்கும் சுதேசா, 4 வயதில் இருந்தே கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்று வருகிறார். சுதேசாவுக்கு ஏற்கனவே இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் உண்டு. இதுவரை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடியதே கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சுதேசா பயிற்சி எடுத்து வந்தார். தற்போது 102 மொழி பாடல்களை கற்றுக்கொண்டு அந்த மொழியின் தன்மை மாறாமல் அச்சு அசலாக பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதனை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் வகையில் நேற்று முன்தினம் மாலை துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதேசா 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். கின்னஸ் நிறுவன அதிகாரிகள் சுதேசாவின் திறமையை பாராட்டி உலகிலேயே குறைந்த நேரத்தில் அதிக மொழிகளில் பாடியவர் என்ற சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுக்கொண்ட மாணவி சுதேசா கூறும்போது, “2 மணி நேரத்தில் ஒரு மொழி பாடலை கற்றுக்கொண்டு விடுவேன். சிறிய பாடலாக இருந்தால் 1½ மணி நேரத்தில் கற்றுக்கொண்டு விடுவேன்” எனத் தெரிவித்தார். மாணவி சுதேசா ஏற்கனவே டுபாய் அரசு சார்பில் சிறந்த மாணவர்களுக்காக வழங்கப்படும் ஹேக் ஹம்தான் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.