பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து ஆற்றை அண்மித்த வாழ்விடங்களில் இருந்து 650 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகம், வடமேற்கு புறநகர் பகுதியில் சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 86 நோயாளிகள் நேற்று மாலை வேளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிஸில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வழமையாக 4 – 5 மீற்றர் உயரத்தில் காணப்படும் ஆற்றின் நீர்மட்டம், இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடரும் மழையினால் 6 மீற்றர்களுக்கும் அப்பால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் வாரத்தில் மழை தொடரும் என எச்சரித்துள்ள வானிலை மையம், செய்ன் ஆறு பெருக்கெடுக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆறு பெருக்கெடுக்குமாயின் ஆற்றை அண்மித்து காணப்படும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மழை காரணமாக பரிஸில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பரிஸில் படகுச் சேவைகள் மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், Louvre அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளது.