மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கருணாநிதியின் காதில் தான் சொன்னதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வைகோ மு.க.ஸ்டாலினை வாரிசு அரசியல் மூலம் கருணாநிதி கொண்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார். ஈழப் பிரச்சினை, 2 ஜி பிரச்சினையில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த வைகோ குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தார்.
இந்நிலையில் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவரைச் சந்தித்து வைகோ நலம் விசாரித்தார். இதன்போது மு.க.ஸ்டாலினையும் அவர் சந்தித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மேடையில் ஸ்டாலின் முதல்வராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று சென்னையில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கனிமொழியுடன் பங்கேற்ற வைகோ சமீபத்தில் கருணாநிதியைச் சந்தித்தேன், நெகிழ்ந்து போனேன். நான் அவர் காதுபட அருகே போய் சொன்னேன். ஒருகாலத்தில் உங்களுக்கு பக்கபலமாக, நிழலாக எப்படி இருந்தேனோ அதே போல் என் ஆருயிர் சகோதரன் ஸ்டாலினுக்கும் இந்த வைகோ அப்படி இருப்பான் என்று கூறினேன் எனத் தெரிவித்தார்.
இன்று சூழ்ந்திருக்கிற நெகிழ்வுகளை விடுவித்து அரசோச்சுவதற்கு, முதல்வர் நாற்காலியிலே செயல் தலைவர் அமர்வதற்கு நான் உறுதியாக பக்கபலமாக இருப்பேன், எனக்கு எந்த தன்னலமும், நோக்கமும் இல்லை என்று தான் அவர் காதில் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து கலைஞர் கருணாநிதி நெகிழ்ந்துபோனதாகவும் கூறினார்.