விமர்சனங்களால் வளைக்கப்பட்டுள்ள மா குறும்படத்தில் அஜித் மகள் அனிகா..
லட்சுமி குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் அனிகா நடித்துள்ள மா குறும்படம் வெளியாகியுள்ளது. லட்சுமி குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகாவை வைத்து மா என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் இந்த குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அம்மு (அனிகா) சக மாணவனுடன் நெருங்கிப் பழகியதில் கர்ப்பமாகிறார். அதை தனது தாயிடம் கூற அவர் இடிந்து போய் மகளை செத்துப் போ என்கிறார்.
மகளை செத்துப்போ என்று சொல்லிய தாய் எங்கே அம்மு இறந்துவிடுவாளோ என்ற பயத்தில் ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.
அம்முவின் தந்தையிடம் கூறாமலேயே கருவை கலைத்துவிடுகிறார்கள். வலிக்காம கருக்கலைப்பு செய்யுங்க டாக்டர் என்று அம்முவின் தாய் கூறும்போது அவரின் பாசம் தெரிகிறது.
அம்முவின் தாய் ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கூட்டாமல் மகள் தவறு செய்துவிட்டதை நிதானத்தோடு கையாண்டு அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறார்.
இன்டர்நெட் காலத்தில் பள்ளிக்குழந்தைகள் தெரியக் கூடாத விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டு செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அப்படி ஆசைப்பட்டதன் விபரீதத்தை படத்தில் நிதானமாக காட்டியுள்ளார் சர்ஜுன்.
மா குறும்படத்தை பார்த்து அம்மு, அவரின் தாயின் நடிப்பை பாராட்டினாலும் பெற்றோருக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. பதின்வயது மகளை நினைத்து பெற்றோர் பயப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
லட்சுமி குறும்படத்தை போன்றே மா குறும்படம் பற்றியும் சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா இல்லையா என்றும், அம்மு செய்தது குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.