2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கு தண்டிக்கும் நோக்கிலான தடைகளின் ஒரு பகுதியாக, 114 ரஷ்ய அரசியில்வாதிகள், 96 பெரு வணிக நிறுவனங்கள் அடங்கிய பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதிலுள்ள சிலர் அதிபர் புதினுக்கு மிகுவும் நெருங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவ்வாறு இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்போருக்கு புதிய தடைகள் விதிக்கப்படவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கான தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிவிட்டது. ஆனால், அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டபோது, அதிலுள்ள அவர் முரண்படும் அம்சங்களையும் தெளிவாக்கினார். தற்போது பட்டியலிடப்பட்டுள்ள சில ரஷ்யர்கள் ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்போரின் நற்பெயரை இந்தப் பட்டியல் பாதிக்கலாம் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இது தடை நடவடிக்கைகளின் ஒரு பகுதி அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃவ், இவ்வாறு நிறுவனங்களின், நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருப்பது எமது நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தலைமையிலுள்ள உறுப்பினர்களின் நற்பெயரை கெடுக்கும் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு இதனால் என்ன?
இது தடை நடவடிக்கை அல்ல என்பதால், ரஷ்யாவுக்கு நல்ல செய்தி. இதுவொரு செய்தியாக மட்டுமே முடிந்து விடுகிறது. அமெரிக்க கருவூல துறை வெளியிட்ட பட்டியலில் உள்ள ரஷ்ய அதிகாரிகளும், பெரிய வணிக நிறுவனங்களும் எதிர்காலத்தில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கவலைப்பட வேண்டியுள்ளது. இந்தப் பட்டியலை அமெரிக்கா வெளியிடுவதற்கு முன்னால், “ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் தலையிடும் முயற்சிதான் அமெரிக்க கருவூலத் துறையின் இந்த அறிக்கை” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. யார் யார் ரஷ்யாவின் அரசியல் மற்றும் உலக வர்த்தக மேல்வர்க்கத்தினர் என்பதை இந்த அறிக்கை பட்டியலிட்டு காட்டுகிறது.
ரஷ்யாவின் உடனடி பதில்:
ரஷ்ய சமூகத்தில் அதிக ஒற்றுமை வளர்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் வழிவகுக்கும் என்று ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் யாசெஸ்லாஃப் வோலோடின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி ஆன்டோனோஃப், தடைகள் எங்கும் இல்லை. எமது நாட்டை அச்சுறுத்துவதாகவும் இல்லை என்று கூறியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் விளாடிமிர் ஸாபிராஃப், நாட்டின் தலைமையிலுள்ள அனைவரையும் ஏறக்குறைய இந்தப் பட்டியலில் சேர்த்திருப்பது, இரு நாட்டு உறவுகளை கடுமையாகப் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் “புதின் பட்டியல்” என்று அறியப்படும் இந்தப் பட்டியலில், அதிபர் விளாடிமிர் புதினின் உதவியாளர்கள் மற்றும், உயர் மட்ட உளவு நிறுவன, வர்த்தக அதிகாரிகளோடு பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ், வெளியுறவு அமைச்சர் சர்கெ லாவ்ரோஃப் போன்ற அமைச்சரவை உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் பெரும் வணிக நிறுவனங்களில் ரோமான் அப்ராமோவிச், ஒலெக் டிரிபாஸ்கா மற்றும் அலிஷார் உஸ்மனோஃப் உள்ளனர்.
டிரம்பின் மெத்தனம்
தடை சட்டம் மூலம் அமெரிக்காவின் எதிரிகளை எதிர்கொள்வது என்கிற அமெரிக்க சட்டப்படி, திங்கள்கிழமைக்குள் இந்தப் பட்டியலை வெளியிட வேண்டியிருந்தது. எனவே, நள்ளிரவுக்கு 10 நிமிடம் இருக்கின்ற வேளையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெளியீட்டு நேரம், இந்த சட்டம் தொடர்பாக அதிபர் டிரம்ப் காட்டும் மெத்தனத்தையும், அதிக ரஷ்யர்களை தடைகள் மூலம் தண்டிப்பதற்கு அவர் விரும்பாததையும் பிரதிபலிக்கிறது.
“இதுவொரு தடைப் பட்டியல் அல்ல. தனி நபர்களின் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இதில் சேர்க்கப்பட்டிருப்பதை, அத்தகையோர் மீதும், நிறுவனங்கள் மீதும் தடைகளை விதிப்பதற்கு என்று பார்க்கக்கூடாது” என்று அமெரிக்க கருவூலத் துறையின் ஆவணமே உறுதிப்பட தெரிவிக்கிறது.
நமக்கு ஏற்கெனவே தெரியாத எதையும் இந்தப் பட்டியல் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடும் பிபிசியின் ஸ்டீவ் ரோசன்பர்க், தடைகளின் கீழ் இல்லாதோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் தாங்கள் இலக்கு வைக்கப்படலாம் என்ற கவலையை ஏற்படுத்தும்.
“இந்த கோணத்தில், சட்டம் வேலை செய்யுமானால், குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டியதில்லை. இந்த சட்டமே ஒரு தடையாக வேலை செய்கிறது” என்று வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நெவ்ரட் கூறியுள்ளார். ரஷ்யா மீது முழு அளவிலான வர்த்தகப் போரை அமெரிக்கா அறிவித்திருப்பதாக இது பொருள்படுகிறது என்று மெடவதேவ் அப்போது கூறியிருந்தார். இந்த சட்டம் கிரிமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கோபத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கருவூலத் துறை குறிப்பிடுகிறது.
ரஸ்ய தேர்தல்களில் தாக்கத்தை செலுத்த அமெரிக்கா முயற்சி
Jan 30, 2018 @ 03:05
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய தேர்தல்களில் தாக்கத்தை செலுத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய அரசாங்கம் இது தொடர்பில் அதிகாரபூர்மாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. அமெரிக்க திறைசேரி, ரஸ்யாவின் உயர் அதிகாரிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி ரஸ்யாவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா தலையீடு செய்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.