குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் வெளியிட்ட கருத்து தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் தலைமயகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இவ்வாறு அதிருப்தி வெளிளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சித்த சுயாதீனத்துடன் கருத்து வெளியிடுகின்றாரா என்ற சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக முடிந்தால் ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சவால் விடுத்ததாகவும், அதனை கட்சி ஏற்றுக் கொண்டு விவாதம் நடத்த முயற்சிக்கும் போது இதனை அரசியல் கண்துடைப்பு நாடகம் என கூறுவது அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வரையில் பதவியில் இருப்பதாக கூறிய ஜனாதிபதி மறுநாள், சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கப்போவதாக கூறியதாகவும் பின்னர் மறுநாள் இந்த அரசாங்கம் 2020ம் ஆண்டு வரையில் நீடிக்கும் என கூறியதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.