மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள பகுதியில், பாறைப் பகுதியில் இருந்து 20 மீட்டார் ஆழத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்று, சக்தி வாய்ந்த வான் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஹமா மாகாணத்தில் உள்ள அந்த மருத்துவமனை சிறப்பான பாதுகாப்பிற்குள் இருப்பதாக கருதப்பட்ட போதும் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் அதன் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை என்ற போதிலும் சிரியாவில் மருத்துவமனைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மோசமான தாக்குதல் என உதவி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் இனி உதவிகளை மேற்கொள்ள முடியாது என ஐ.நா., தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் காஃபர் சிட்டா நகரில் உள்ள அல் மகஹாரா குகை மருத்துவமனையை ஐந்து ஏவுகணைகள் தாக்கியது என மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் சத்தம் கேட்டவுடன் நோயாளிகளும் பணியாளர்களும் பாதுகாப்பான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது