குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
சட்டவிரோத கருக்கலைப்புக்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது, வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சட்டவிரோத கருக்கலைப்புக்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
மஹிந்த ஆட்சி காலத்தில் கடந்த 2013ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இடம்பெற்றன. அந்த நிலைமை தற்போது தொடர்கின்றது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , கிளிநொச்சி – வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக நாங்கள் சாட்சிகளை பெற சென்றிருந்தபோது அங்கே கடற்படையினர் எம்மை அச்சுறுத்தினர்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சில சாட்சிகளை பெற்று போர்க்குற்ற சாட்சியாக அனுப்பியிருந்தோம். அதேவேளை 2013ம் ஆண்டு கால பகுதியில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். சிலநாட்களில் அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஆனால் கர்ப்பிணி பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்ததாக கூறப்பட்டது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், சட்டவிரோத கருக்கலைப்பு 2013ஆம் ஆண்டு நடைபெற்றது உண்மை. அது மத்திய அரசாங்கத்தினால் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. அதில் அநீதி இழைக்கப்பட்டமை உண்மையே. இப்போதும் அந்த நிலைமை தொடர்ந்தால் ஆதாரங்களுடன் எமக்கு தெரியப்படுத்துங்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.