“எனக்காவது இந்த குடிசை வீடு உள்ளது. இதுகூட இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு 2 படுக்கை அறை வீடுகளை வழங்குங்கள்” என தெலங்கானா மாநிலத்தில் சிரிசில்லா மாவட்டத்தில் வசிக்கும் ஷபீனா பேகம் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், அமைச்சருமான ராமாராவிடம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே வசிக்கும் ஏழை மக்களுக்கு 2 படுக்கை அறை தொகுப்பு வீடுகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அமைச்சர் ராமாராவ், சிரிசில்லா மாவட்டத்தில் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது முஸ்தாபாத் பகுதியில் கோணிப்பைகளை கூரையாக அமைத்து, வெறும் செங்கற்களால் பூச்சு வேலைகூட இல்லாத குடிசை வீடு இடிந்து விழும் நிலையில் இருந்தது.. அந்த வீட்டை பார்த்த அமைச்சர் ராமாராவ், வீட்டின் உரிமையாளர் யார் என கேட்டுள்ளார். அப்போது, ஷபீனா பேகம் என்பவர் ஓடிச் சென்று, “இது என் வீடுதான். இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் எனக்கு முந்தைய அரசு வழங்கியது” எனக்கூறியுள்ளார். அதை கேட்ட அமைச்சர் ராமாராவ், “கூரைகூட இல்லாமல் உள்ள இந்த வீட்டிற்கு பதிலாக அரசு வீட்டை பெற்றுக் கொள்ளலாமே?” என அந்த பெண்ணிடம் கேட்ட போதே அந்த ஏழை பெண் மிகப்பெரும் மனதோடு வீடில்லாதவர்களுக்கு அதனைக் கொடுங்கள் எனக் கூறியது கேட்டு அமைச்சர் கே.டி. ராமாராவ் நெகிழ்ந்துபோனார். வீட்டை புதிய கூரை போட்டு புதுப்பித்து தகொடுக்கும்ம்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.