கடும் எதிர்ப்புக்களின் மத்தியில் வெற்றித் திரைப்படமாக காணப்படும் பத்மாவத் வரலாற்றுத் திரைப்படம் ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதி மன்ற நீதிபதி சந்தீப் மேத்தா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் பார்வையிட ஜோத்பூர் நகரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பத்மாவத் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் இப்படத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் மீது வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிராக தீவானா காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. அவ்வழக்கை விசாரரித்துவரும் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி இத்திரைப்படத்தை பார்க்க சிறப்புத் திரையிடலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பத்மாத் திரைப்படம் வரலாற்றை சிதைத்துவிட்டது என்றும் ராணி பத்மினி பற்றிய மக்கள்வைத்திருக்கும் உயர்ந்த பிம்பத்தை காயப்படுத்திவிட்டது என்றும் வீரேந்திர சிங் மற்றும் நாக்பால் சிங் ஆகிய இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதியின் முடிவை பாதுகாப்பதற்கு இப்படத்தின் திரையிடல் அவசியமானது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளதாக இவ் வழக்கை விசாரித்த நீதிபதி மேத்தா கூறியுள்ளார். மனுதாரர், நீதிமன்றத்திற்காக திரைப்படத்தை திரையிட தனது ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து நீதிபதி மேத்தா இன்று திரையிடலுக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் இன்று மாலை 8.00 மணியளவில் ஐநாக்ஸ் மால் அரங்கில் இவ்வரலாற்றுத் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. ஒரே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யும்விதமாக திரைப்பட அரங்க உரிமையாளர்களுக்கு சிறப்பு கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கை சூழ நூறு காவல்துறையினர் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்டடுள்ளனர்.
அடிப்படைவாத அமைப்புக்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வெளியான பொலிவுட் திரைப்படமான பத்மாவத் பெரும் வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.