குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டு கடன் பெற்றுக் கொண்ட மோசடிகளிலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் போதும் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான 32 கிலோ மீற்றர் பாதையை அமைப்பதற்காக அரசாங்கம் ஜப்பானின் மிட்சுபிஸி வங்கியிடமிருந்து 138 பில்லியன் ரூபாவினை கடனாக பெற்றுக்கொண்டது. இந்த கடனைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜப்பானிய வங்கியின் இலங்கை முகவராக அர்ஜூன் அலோசியஸ் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதியுடனேயே வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்வது தொடர்பிலான அனுமதியை மத்திய வங்கியின் அப்போதைய தலைவர் அர்ஜூன் மகேந்திரன் வழங்கியுள்ளார். இந்தக் கொடுக்கல் வாங்கல்களிலும் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.