குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. எமது இறையாண்மையின் அடிப்படையில் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு பிரிக்கப்படாத நாட்டுக்குள் கௌரவமான பிரஜைகளாக நாம் வாழக்கூடிய தீர்வையே நாங்கள் கேட்கிறோம். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதரவு தெரிவித்து யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் ஒற் றையாட்சி தொடருமா? தமிழீழம் மலருமா? என பார்ப்போம் என கூறுகிறார். நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. 1987ம் ஆண்டு 13ம் திருத்தச்சட்டம் வந்த பின்னர் அதனை நாங்கள் ஏற்காதபோதும், 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் நாம் போட்டியிடாதபோதும் அதனை தீர்வுக்கானமுதல் படியாக நினைத்தோம்.
அதன் பின்னர் நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. எமது இறையாண்மையின் அடிப்படையில் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு பிரிக்கப்படாத நாட்டுக்குள் கௌரவமான பிரஜைகளாக நாம் வாழக்கூடிய தீர்வையே நாங்கள் கேட்கிறோம்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில் போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியப்படவேண்டும். அதனடிப்படையில் நீதி வழங்கப்படவேண்டும்.
நீதியின் அடிப்படையில் பொறுப்புகூறல் இடம்பெறவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும், மீள நிகழாமை உறுதி செய்யப்படவேண்டும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதனை தாம் செய்வதாக இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. அதனை விடவும் இன்றைக்குள்ள சர்வதேச சட்டத்தின் பிரகாரம் விசேடமாக ஐ.நா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் மக்கள் மீது ஆட்சி செய்பவர்கள் ஜனநாயக தேர்தல் ஊடாக மக்களின் சம்மதத்தை பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 1956ம் ஆண்டு தொடக்கம் மக்கள் அந்த ஆணையை எப்படி வழங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 1956ம் ஆண்டு தொடக்கம் இன்றளவும் நடக்கின்ற ஆட்சி எங்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி.
இந்த நிலை தொடர முடியாது. இது மாற்றப்படவேண்டும். எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை கோரும் உரிமை உண்டு. அந்த உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மீறப்பட்டால் நாங்கள் வெளிப்பட்ட சுயநிர்ணய உரிமையை கோருவோம். அதற்கு சர்வதேச சட்டங்களில் இடமுண்டு. எமக்கு உரிமையும் உண்டு.
தமிழ் மக்கள் இந்த தேர்தலில் என்ன தீர்ப்பை வழங்கப்போகிறார்கள்? என சர்வதேசம் பார்த்துக் கொ ண்டிருக்கிறது. இன்றும் கூட ஒரு இராஜதந்திரி என்னை தொடர்பு கொண்டு கேட்டார். கடந்த 2015ல் மக்கள் உங்களுக்கு கொடுத்த ஆணையை இப்போதும் தருவார்களா? என மக்கள் ஆணை கொடுக்கவில்லை. தங்களுடைய விசுவாசமான பிரதிநிதிகளாக எங்களை கருதினார்கள். அந்த நிலை பலமடையவேண்டும். பலவீனப்படுத்தப்பட முடியாது. நாம் பக்குவமாகவும், நிதானமாகவும் நடந்திருக்கிறோம். என மேலும் தெரிவித்தார்.