இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜுலன் கோஸ்வாமி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். தென்னாரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாணச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பினை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து 303 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் லாரா வால்வார்ட்டின் விக்கெட்டினை இந்திய பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி கைப்பற்றியிருந்தார்.
இது ஜூலன் கோஸ்வாமி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய 200 வது விக்கெட் ஆகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீராங்கனைகளில் ஜூலன் கோஸ்வாமி முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 35 வயதான ஜூலன் கோஸ்வாமி, 166 ஒருநாள், 60 இருபதுக்கு இருபது மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.