குளோபல் தமிழ் செய்தியாளர்
2015ம் ஆண்டில் ஈட்டிய வெற்றியை இழந்துவிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மருதானையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமாகுமாறு அவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் கோரியுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை மக்கள் புத்திசாதூரியமாக வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார். உயிர்ச் சேதங்கள் இடம்பெறவில்லை எனவும் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியையும், பிரதமரையும் விடவும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரம் கொண்டதாக உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.