அயோத்தி வழக்கை நிலப்பிரச்சினையாக மட்டுமே அணுகுவோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010 தீர்ப்பளித்திருந்தமையை எதிர்த்து 13 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமாகிய நிலையில உத்தர பிரதேச அரசு சார்பில் 504 ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் உட்பட 32 பிரபலங்கள் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரியுள்ளனர் எனவும் அவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இது வெறும் நிலப்பிரச்சினை வழக்கு. அந்த வகையில் மட்டுமே வழக்கை அணுகுவோம் எனவும் தெரிவித்து வழக்கினை மார்ச் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.