பெப்சி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி)யின் முதல் தன்னாட்சி பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் இவர் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையில் தன்னாட்சி இயக்குநர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்த பொறுப்பை வகிப்பவர் பெண்ணாக இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்திரா நூயின் பங்களிப்பும் இனிமேல் இருக்கும் எனவும் கிரிக்கெட் தொடர்பான பதவியை அவர் வகிப்பது இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ள ஐசிசியின் தலைவர் சஷாங்க் மனோகர் வர்த்தகத்தில் முக்கியப் புள்ளியான அவர், இந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.