நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சில காரணங்களால் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
வட்டாரங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து பெறுபேறுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மற்றும் தொலைபேசி மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் குறித்த அப்பெறுபேறுகளை உற்றுநோக்கி தபால் மூல வாக்களிப்பு முடிவுகளுடன் இணைத்து வெளியிடவேண்டியுள்ளதுடன் சில மாவட்ட செயலகங்களில் இருந்து பூரண தேர்தல் முடிவுகள் கிடைக்காமையினால், முழுமையான பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தெரிவத்தாட்சி அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ஆகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு போதிய கால அவகாசம் தேவையென்பதுடன் வட்டார முடிவுகளை கணனி மயப்படுத்தி தரவுகட்டமைப்புக்கள் இணைக்க வேண்டியுள்ளது.
இதனால் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். ஆகவே தேர்தல் முடிவுகள் வெளியிடும் வரை பொறுமைகாக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விசேட ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.