குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஐக்கிய தேசிய கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1000 பௌத்த விகாரைகள் அமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு உள்ளதாவும் குறிப்பிட்டு உள்ளது,
நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்ப்பாடுகள் தேவையற்ற ஒன்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்து , கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மக்களே வாழ்கின்றனர். பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் மிக மிக குறைவாகவே உள்ளனர். அந்நிலையில் வடக்கு கிழக்கில் புதிதாக 1000 விகாரைகள் அமைக்க வேண்டிய தேவையில்லை. அது நல்லிணக்கமும் இல்லை
எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு உள்ள விகாரை அமைப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளேன். குறித்த முறைப்பாட்டை இன்று திங்கட்கிழமை காலையில் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடைபெறும் போது இம் இம் முறைப்பாடும் எடுத்துக் கொள்ளப்படும். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. இனி வரும் காலங்களிலாவது நடக்காமல் பார்க்க வேண்டும் என்று கோருகின்றோம். மதத்தை பயன்படுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டமை தொடர்பிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேலும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.