குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான வாக்குகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மஹிந்திற்கு எதிரான வாக்குகள் 51.28 வீதத்திலிருந்து 2018ம் ஆண்டில் 55.35 வீதமாக உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாட்டின் 44 வீதமான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியை பதிவு செய்த போதிலும், மீளவும் ஜனாதிபதியாகும் மஹிந்தவின் கனவு தொடர்ந்தும் கனவாக நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அராசங்கத்திற்கான ஓர் எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதாகவும், அரச சேவையை சுயாதீனமாக்குவதாகவும், அனைத்து இலங்கையர்களின் உரிமைகளை உறுதி செய்வதாகவும், அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதாகவும், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களுக்கு தண்டனை விதிப்பதாகவும் வாக்குறுதி அளித்தே ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வாக்குறுதிகள் உரிய வேகத்தில் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இதுவே தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.