குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் தற்போது 16.6 அடியாக இருப்பதனால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னைய காலங்களில் இரணைமடுகுளத்தில் 30 அடியாக நீர் சேமிக்கப்படுகின்ற போது பெப்ரவரி மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும். இந்தநேரங்களில் இரணைமடுகுளத்தின் கீழ் 8000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு குளத்தின் நீர் கொள்லளவு 36 அடியாக உயர்த்தப்பட்டுள்ள போதும் கடந்த பருவ மழை போதுமானதாக இன்மையால் புனரமைக்கப்பட்ட குளத்தில் போதுமானதாக நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு தற்போது 16.6 அடியே காணப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் இவ்வருடம் சிறுபோக விதைப்பு சாத்தியப்படாது போய்விடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது
மார்ச் மாதம் பெரும்பாலும் மழைபெய்து வழக்கம்.அவ்வாறு வரும் மார்ச் மாதம் மழை பெய்து குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்தால் சிறுபோகம் சாத்தியமாகும் எனவும் இல்லை எனில் தற்போதுள்ள குளத்தின் நீர் மட்டத்தினை கொண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது சாத்தியமற்றதுஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக 10 அடியாக பேணப்படவேண்டும், எனவே எஞ்சிய ஆறு அடி நீரில் சிறுபோகம் செய்து என்பதே பிரச்சினைக்குரிய விடயம் எனவும் தெரிவித்தனர்.