பூகோளவாதம் புதிய தேசியவாதம் – மு. திருநாவுக்கரசு…
பேராசிரியர் ராமு மணிவண்ணன்: அணிந்துரை
21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம்
அணிந்துரை
மதிப்பிற்குரிய மு. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம் என்ற இப்புத்தகம் ஏனைய ஆய்வு அரசியல் கட்டுரைப் புத்தகங்களை விட பன்முகப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தமிழர்களின் அரசியலில் மொழி, இன, கலாச்சார அடையாளங்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு வெகுநீண்ட காலமாக அரசியல் பேசப்பட்டது. அதையொட்டிய அரசியல் முன்னெடுப்புகளே ஓர் இயல்பான நிலைப்பாடாக பார்க்கப்பட்டது, பார்க்கப்படுகின்றது. சரித்திர மாற்றங்களையும் புவிசார் அரசியலையும் பூகோளவாதத்தையும் அரசியல் கலாச்சாரத்தையும் தமிழீழ அரசியல் கருத்தாளர்களும் போராளிகளும் பொது மக்களும் நடைமுறை அரசியலில் ராஜதந்திர ரீதியாக பெருமளவில் கையாளவில்லை.
இந்தப் புத்தகம், ஈழ அரசியலிலும் மற்றும் அதன் நிகழ்கால முன்னெடுப்புகளிலும் மிகப்பரந்த பார்வையாக உலகளாவிய வரலாற்று நிகழ்வுகள், கலாச்சார தன்னிருப்புப் போராட்டங்கள், பூகோள அரசியல், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காலனிய ஆதிக்கம், மற்றும் தற்கால அரசியல் என பல விடயங்களை உள்ளடக்கி ஒரு புதுவிதமான அணுமுறையை முன்வைக்கின்றது. இது ஈழ அரசியலின் மறுக்கண்டெடுப்பு என்றே விளிக்கலாம்.
இத்தகைய பரந்த உலகளாவிய கருத்துகளை உள்ளடக்கிய புத்தகத்தை எழுதுவது மட்டும் கடினமல்ல, அதை வாசிப்பதும் கூட மிகவும் சவாலான விடயம். அத்தனை ஆழமான கருத்துகள். இவை அனைத்திற்கும் அடித்தளமாக அமைவது ஈழத்தமிழர்களின் சுதந்திர வேட்கையும் நீதிதேடும் சாட்சியமுமே ஆகும். இந்தப் புத்தகத்தின் மையக்கருத்து சுதந்திரமும் நீதியும் சித்தாந்த ரீதியாக மட்டுமே மாற்றுப்பண்டமாக கொடுக்கப்படுவதும் பெறப்படுவதும் கிடையாது என்பதை உணர்த்துகின்றது. சித்தாந்தங்களையும் கடந்து எதார்த்தமான அரசியல் உண்மைகள் மூலமாகளவும் பூகோள அரசியல் ரீதியாகவும் புவிசார் அரசியல் மற்றும் அரசியல் கலாச்சாரம் ஊடாகவும் ஈழத்தமிழர்களின் நீதித்தேடும் பயணமும் சுதந்திர வேட்கையும் அமைய வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் மையம்.
ஈழத்தமிழர்கள் 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, காலனிய ஆதிக்கம் ஈழ மண்ணில் பதிந்தது முதல் புவிசார் சிந்தனையையும் ராஜதந்திர அரசியல் நகர்வுகளையும் அண்டை நாடுகளுடனான உறவுகளையும் அவற்றை பேணுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் இருக்க வேண்டிய அரசியல் வெளியுறவு அக்கறையை சிறிது சிறிதாக கைவிடத்தொடங்கினர். அந்த நீட்சியே ஒருங்கிணைந்த இலங்கை, சிங்களவர்களின் கையில் சுதந்திர நாடாக ஒப்படைக்கப்பட்ட நிகழ்விற்கு இட்டுச் சென்றது. தமிழீழத்தின் இறையாண்மை, மரபுசார் மறதியாக நான்கு நூற்றாண்டுகளுக்குள் மாறியதும் இவ்வாறே. இதே சமயத்தில் சிங்களவர்களின் சரித்திர நடவடிக்கைகள், சமூக கலாச்சார முன்னெடுப்புகள், இனமும் மதமும் ஒருங்கிணைந்த மகாவம்சத்தின் பார்வை, சிங்கள அடிப்படைவாதம், இனவாதம் சிங்களவர்களின் அரசியல் மற்றும் தேசியவாத வளர்ச்சியினை தீர்மானித்தது. அதனை சரித்திர கலாச்சார ரீதியாக அரசியல் கண்கொண்டு விவரிக்கிறது இப்புத்தகம்.
மதம், இனம், மொழி உள்ளிட்ட அடிப்படையான அடையாளங்களைக் கடந்து புவிசார் அரசியல், பூகோளவாதம் வாயிலாக அரசியல் தத்துவார்த்தங்களை பரிந்துரைப்பது, இப்புத்தக்கத்தின் தனித்துவம். மேலும் இப்புத்தகம் மனித இனத்தின் வளர்ச்சி, கலாச்சாரம், மானிடவியல் என பன்முக நிலையிலிருந்து அரசியல் நிலையைப் பேசுகின்றது.
“ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்”, என்னும் குறள், ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானேன், அவன் உலகம் முழுவதும் ஆளக்கருதினும் அது முடியும் என்பதை சுட்டுக்காட்டுகின்றது. ஆசிரியரின் அரசியல் மொழி, திருவள்ளுவரின் கால மொழியை நினைவூட்டுகின்றது. இராணுவ பலம், புவிசார் அரசியல், ராஜதந்திர முன்னெடுப்புகள் இவை அனைத்துமே முக்கியமானதாக கருதப்பட்டாலும் அரசியலில் வெற்றிக்கு காலமும் சூழலும், அதை கையாளும் திறனும் தான் ஒரு முழுமையான வெற்றியை ஈட்டித்தரும் என்பதை ஆசிரியர் பதிவுச் செய்கின்றார்.
இப்புத்தகம் மாறுபட்ட கோணத்திலிருந்து இனப்பிரச்னைக்கான தீர்விற்கு வழி அமைக்கின்றது. அதன் வழியாக ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்கும் நிலவிய சரித்திர கலாச்சார பூகோள ரீதியான உறவையும் அந்த உறவில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களையும் உளவியல் ரீதியாக விவரிக்கின்றது. அத்துடன் இந்திய கொள்கை வடிவாளர்களுக்கும் இந்திய அரசிற்கும் ஓர் அடிப்படையான சவாலான கேள்வி எழுப்புகின்றார் திருநாவுக்கரசு. மேற்கத்திய நாடுகளையும் மற்றும் சீனாவையும் மாறி மாறி இந்தியாவிற்கு எதிராக கையாளும் சிங்களவர்களின் ராஜதந்திரத்தை இத்தனை பெரிய இந்தியாவால் விளங்கிக்கொள்ள முடியாமல் போனதேன் என்பதே அந்த அழுத்தமானக் கேள்வி.
நாடாற்ற மனிதன், நாடிழந்த ஒரு சமூகம் அதன் விளைவாக சந்திக்கின்ற இன-கலாச்சார-அரசியல் ஒடுக்குமுறைகள் இப்புத்தகத்தின் முக்கியமான அங்கம். 2009 ஆம் ஆண்டு நடந்தேறிய கொடூரப் போரும், இலங்கை அரசு வன்முறை, ராணுவ வெறியாட்டம், இதற்கு இணையான உலக வல்லாதிக்கங்களின் கள்ள மெளனத்தையும் அண்மைக் கால நினைவுகள் என்பது நமக்கு நினைவூட்டுக்கின்றது.
தமிழர்கள் படுகொலை என்பதைவிட மனிதப் படுகொலைகளுக்கு ஆரவார கொண்டாட்டங்களை நிகழ்த்தியது சிங்கள பேரினவாதம். இந்த வெற்றியாளர்களின் நீதியில் மனித உரிமை மீறல்களும், தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரும் திட்டமிட்ட இனப்படுகொலையும் அல்லியின் குடயிதழ்களைப் போன்று உள்ளடங்கியிருக்கின்றது. ஈழத்தமிழர்களின் சுதந்திர வேட்கையும் தமிழீழத்திற்கான ஆசிரியரின் நீதித்தேடலும் உலகப்பார்வையாக எடுத்துரைப்பது மிகப்பெரிய சவாலாகும். கீழை நாடுகளின் அரசியல் அறிவியல்- சமூக அறிவியலை சித்தாந்தவாதிகளின் பார்வையில் எடுத்துரைப்பது கடினமான தொடர்பணியாகும்.
மேற்கத்திய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளையும் சித்தாந்த நெறிமுறைகளையும் கடந்து கீழை நாடுகளிலிருந்து ஒரு புதியப் பார்வையை வெளிக்கொண்டு வருவது ஓர் அபூர்வமான முயற்சி. இது பாராட்டுக்குரிய முன்னெடுப்பு.
இந்தப் புத்தக்கத்தினை வழிநடத்தும் பிரதான கருதுகோள்களாக பின்வரும் இரு கருதுகோள்கள் உள்ளன. முதலாவதாக, எதேச்சதிகார புதிய தேசியவாதம் என்ற கருத்தினை எடுத்துரைப்பதோடு இதற்குள் சர்வதேசியவாதம், தாராளமயமாக்கல், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம், ஒருங்கிணைந்த புவிசார் அரசியல், மற்றும் உலகமயமாக்கப்படுகின்ற அரசியல் போர்ச் சூழலையும் எடுத்துரைக்கின்றது. அதீத வளர்ச்சியினால் உலக மக்களின் வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் தேசிய இன அடையாளங்களிலும் இருக்கின்ற பன்முகத்தன்மை சீரழிக்கப்பட்டு வருகின்றது.
இந்த காரணிங்களுக்கெல்லாம் எதிர்மறையாக ஆக்கப்பூர்வமான அறிவியல், மனிதநேயம், இயற்கைப் பாதுகாப்பு, கலாச்சாரப் பண்பாடு இருப்பிடங்களை மீட்டெடுத்தல், தேவையை ஒட்டிய வளர்ச்சி உள்ளிட்டவை இரண்டாவது கருதுகோளின் மையமாக அமைந்திருக்கின்றது. இந்த இரண்டு கருதுகோள்களும் இடையேயான உரையாடல் தான் இப்புத்தக்கத்தின் கருப்பொருள்.
இப்புத்தக வரைவினை வாசித்ததிலும் இதற்கு அணிந்துரை வழங்குவதிலும் மட்டற்ற மகிழ்ச்சியையும் பணிவுக்கலந்த பெருமையையும் அடைகின்றேன். மு. திருநாவுக்கரசு அவர்களின் அரசியல் களப்பணியையும் அறிவுக்கூர்மையையும் தமிழீழத்திற்கான சிந்தனை உழைப்பாற்றலையும் கண்கூடாகவே அறிவேன். அரிஸ்டாட்டிலின் ‘மனிதன் ஓர் அரசியல் சமூக விலங்கு’ என்ற தத்துவார்த்த பார்வையை பூகோளவாதம் என்ற நூலிழையின் ஊடாக இப்புத்தகம் கடக்கச் செய்கின்றது. தமிழீழ அரசியலுக்கான புதியக் கோணத்தை வழங்கும் இப்புத்தகம், அரசியல் வட்டத்தில் மட்டுமின்றி பரந்தப்பட்ட மக்கள் தளத்தில் வாசிக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்,
பேராசிரியர் ராமு மணிவண்ணன்,
தலைவர், அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
23-1-2018