குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சபையும் கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய மாபெரும் நடமாடும் சேவை இன்று(25) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு காலை 9.30 மணி முதல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது. மக்களை நோக்கிய சேவை எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் நன்மை கருதி வட மாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இந் நடமாடு சேவை இடம்பெற்றுள்ளது.
வட மாகாண சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலிலும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களம், மாற்றுவலுள்ளோருக்கான தேசிய செயலகம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் இச் சேவை இடம்பெற்றுள்ளது
மூக்குக் கண்ணாடி வழங்கல், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு திருத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகளை வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மலசல கூடத்திற்கான காசோலை வழங்குதல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவி, மாற்றுத்திறனாளிகளாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவி, முதியோர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல், நலிவுற்றோருக்கான நிவாரண உதவி, சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.