கேரள மாநிலம் அட்டப்பாடியில் 27 வயது ஆதிவாசி இளைஞர் மது, கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தநிலையில் அவரது உடற்கூறு ஆய்வறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை எனவும் சில காட்டுப்பழங்களும் வாழைப்பழத் துண்டு ஒன்று மட்டுமே காணப்பட்டுள்ளதாகவும் பல நாள்கள் பட்டினியாகக் கிடந்துள்ளதால், அவரின் எலும்புகளும் தசைகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அவரின் உடல் முழுவதும் காயம் இருந்துள்ளதெனவும் தலையிலும் பலத்த காயம் காணப்பட்டுள்ளதுடன் மார்புக்கூடு இரண்டாக உடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுவின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின், மேலும் சில உண்மைகள் தெரிய வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் கேரள அரசிடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
200 ரூபா பெறுமதியான அரிசி திருடியதாக தெரிவித்தே குறித்த குழு மதுவை காட்டுக்குள் சென்று பிடித்து அடித்துள்ளனர். அந்தநேரம் மது; சமையல் செய்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த அரிசி உணவை சமைத்து மது உண்டிருந்தால்கூட அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறாவது எஞ்சியிருந்திருக்கும். கடைசி வரை காய்ந்த வயிற்றுடன்தான மது உயிரிழந்துள்ளார் என வேதனை வெளியிடப்பட்டுள்ளது