மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வந்த முகவரிக்கு, கோட்டை நீதிவான் அனுப்பிய அழைப்பாணை உத்தரவு மீள திரும்பி வந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் முன்னிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக முன்னிலையாகுமாறு மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனுக்கு உத்தரவு அனுப்பட்டிருந்த போதும் குறித்த முகவரியிலுள்ள வீட்டில் அவர் தற்போது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் முகவரியை மாற்றி தலைமறைவாகியுள்ளமை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந் நிலையில் அர்ஜுன மகேந்திரன் மார்ச் மாதம் 8 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவது சாத்தியமில்லை என்பதால், அவர் தொடர்பில் முன்னெடுக்கத்தக்க அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் பெரும்பாலும் அவரைக் கைது செய்ய சர்வதேச காவல்துறையினருக்கு சிவப்பு அறிவித்தலை நீதிமன்றம் ஊடாக விடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அர்ஜுன மகேந்திரனுக்கு அறிவித்தலை சர்வதேச காவற்துறை ஊடாக அனுப்பியிருந்த போதும் அது தொடர்பில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக அது சாத்தியப்படவில்லை.
எவ்வாறாயினும் அர்ஜுன மகேந்திரனின் தொலைபேசி இலக்கம் என நம்பப்படும் இலக்கத்தை விசாரணைகள் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் காவற்துறை அத்தியட்சகர் பி.அம்பாவில நேற்றுக் காலை வரை அவ்விலக்கத்துக்கு அழைக்க முயற்சித்த போதும், அவ்விலக்கம் பாவனையில் இருக்கவில்லை. எவ்வாறாயினும் கடந்த 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்பதை அர்ஜுன மகேந்திரன் அறிந்திருந்தார் என்பதை சி.ஐ.டி. உறுதி செய்திருந்தது.
சர்வதேச காவற்துறையினரின் சட்ட விதிகளில் 10.1 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக நீதிமன்ற அறிவித்தலை கையளிக்க முடியாது என அறிவித்திருந்த நிலையில், இலங்கையுடன் உள்ள தொடர்பு காரணமாக விசாரணைகளை முன்னெடுத்து அர்ஜுன மகேந்திரன் குறித்த சிங்கப்பூர் முகவரியில் வசிப்பதை உறுதிசெய்துள்ளனர். அதன்படியே அந்த முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு அறிவித்தலை பெற குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியகி உள்ளன.