70 ஆண்டுகாலமாக ஊழல் செய்தவர்களால் தமது உயிருக்கு ஆபத்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கோவா தலைநகர் பனாஜியின் சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்த மோடி அங்கு உரையாற்றுகையில் தான் ஆணவத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை எனவும் மக்களின் துயரம் தனக்குப் புரிவதனால் கறுப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே குடும்பத்தையும் வீட்டையும் விட்டு வெளியே வந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு எதிரான சக்திகள் தன்னை அழிக்க நினைக்கிறார்கள் எனவும் அவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ள அவர் தன்னை உயிரோடு எரித்தாலும் கூட கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் 50 நாட்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நாட்டையே மாற்றி காட்டுவேன் எனவும் ஊழல் செய்தவர்களின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 30-க்குப் பின்னர் தனது இந்த திட்டம் தவறு என நிரூபணம் ஆனால் அதற்காக எந்த ஒரு தண்டனையையும் ஏற்கவும் தயாராகவே இருப்பதாகவும் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.