தமிழ் சினிமாவில் மிக இளவயது நாயகன் என்றும் குழந்தை நட்சத்திர சூப்பர் ஸ்டார் என்றும் பெயரைத் தட்டிச் சென்ற மகேந்திரன் மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக ‘நாட்டாமை’ படத்தில் அறிமுகமானார். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் சுமார் 110 படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்று சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர். 24 நான்கு வயதில் ‘விழா’படத்தின் மூலம் நாயகன் ஆனார்.
தற்போது இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுந்தரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகும் நிலையில், புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மகேந்திரன். இந்த புதிய படத்திற்கு ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒளிப்பரப்புவதற்கு முன்பாக ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு…’ என்று புகைப்பிடிப்பதற்கு எதிரான விளம்பரம் ஒன்று திரையிடப்படும்.
தற்போது இந்த வசனத்தையே படத்தலைப்பாக வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய படத்தை நல்.செந்தில் குமார் இயக்குகிறார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி வெளியிட்டிருக்கிறார்கள்.