குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியா பாராளுமன்றில் இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ள போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விக்கி பொக்ஸ்க்ரொப்ட், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அமுல்படுத்துகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட, ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட், காவல்துறை மறுசீமைப்பு, நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி மூன்றாண்டு திட்டத்தின் அடிப்படையில் இலங்கைக்கு 6.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காலமாறு நீதிப்பொறிமுறைமை, நம்பகமான பொறுப்புகூறுதல் பொறிமுறைமை, சிவிலியன் காணிகளை இராணுவத்தினர் மீளவும் ஒப்படைத்தல் போன்ற விடயங்கள் குறித்து அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்த போது கலந்துரையாடப்பட்டதாகத் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்