குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அவசரகாலச் சட்ட அறிவிப்பு தொடர்பில் உலகின் முக்கிய நாடுகள் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இன முரண்பாடுகள் காரணமாக இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவும் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பிரித்தானிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் பத்து நாள் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரஜைகள் அவதானத்துடன் இருக்குமாறும் அவுஸ்திரேலியா கோரியுள்ளது.