மியான்மாரின் வடக்கு மாகாணமான ரக்கினே பகுதியில் ரொஹிஞ்ஜா இனப் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற மோதல்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொஹிஞ்ஜா இனத்தை சேர்ந்த மக்கள் மீது மனித உரிமைகளை மீறும் வகையில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதனை வெளியுலகுக்கு மறைப்பதற்காக ஊடகவியலாளர்களை அரசாங்கம் தடுத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட ரொஹிஞ்ஜா இன மக்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பாதுகாப்பு படையினருடன் மிக கடுமையான மோதல்களில் ஈடுபட்டுவரும் இவர்களை ஒடுக்கும் வகையில் ரக்கினே பகுதியை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.