கௌரவக் கொலைகளை திட்டமிட்ட குற்றச் செயலாக கருதும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றல் தெரிவித்துள்ளது. கௌரவக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சக்தி வாகினி என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அத்துடன் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளம் ஜோடிகளுக்கு எதிராக மனித உரிமை மீறலில் ஈடுபடும் ‘காப்’ பஞ்சாயத்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்திருந்தநிலையில் திருமண உறவுக்கான சுதந்திரத்தில் பிறரின் தலையீட்டை தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளதாக இந்திய மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கௌரவக் கொலைகளை திட்டமிட்ட குற்றச் செயலாக கருதும் இச்சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் எனவும் சட்டம் ஒழுங்கு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும் 23 மாநிலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மசோதா நிலுவையில் இருந்தாலும், திருமணம் செய்துகொள்ள விரும்பும் காதலர்கள் மற்றும் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம்.
மேலும் இத்தகைய ஜோடிகளை பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைத்தோ அல்லது வேறு ஏதேனும் தகுந்த வகையிலோ காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்களின் முறைப்பாடுகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பிரிவு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது