இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இந்த வெறுப்பூட்டும் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வன்முறைகளை அரச தலைவர்கள், சமய மற்றும் இதர சமூகத் தலைவர்கள் கடுமையாக கண்டிக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரகால நிலையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்புடையதாகவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அமைந்திருக்கும் என்பதிலும் ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.