Home இலங்கை அனைத்து இனவாதங்களுக்கும் எதிரான சமவுரிமை இயக்கத்தின் ஆர்ப்பாட்டம்…

அனைத்து இனவாதங்களுக்கும் எதிரான சமவுரிமை இயக்கத்தின் ஆர்ப்பாட்டம்…

by admin

அனைத்து இனவாதங்களுக்கும் எதிராக சமவுரிமை இயக்கம் கடந்த  08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தது.

இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்! ( 2018 மார்ச் 05அன்று சமவுரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கை)

கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தணிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது.  இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் ஏற்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். இந்நிலைமை எரிமலையின் முகட்டைப் போன்று இருப்பதோடு சிறு சம்பவம் கூட அந்த எரிமலையை வெடிக்கச் செய்துவிடும். இந்த நிலைமை தானாக உருவானதொன்றல்ல.

மக்கள் மத்தியில் அடிக்கடி நிர்மாணிக்கப்படும் பல்வேறு பிரிவினைகள், வீண்புரளிகளை சிருஷ்டிக்கும் இயந்திரங்கள், தமது அதிகார நோக்கத்திற்காக சமூகத்தின் இருப்பை துச்சமாக மதிக்கும் அரசியல்வாதிகள் போன்ற அனைவரும் இது விடயத்தில் பங்கேற்றிருக்கின்றார்கள். இந்த கருத்தியல் யுத்தத்திற்கு சிறந்த உதாரணம் முஸ்லிம் வியாபாரிகளால் கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் மலட்டுத் தன்மையை உருவாக்கும் குளிசை சம்பந்தமான பிரச்சாரமாகும். இரு சம்பந்தமாக எந்தவித விஞ்ஞான அல்லது தர்க்க ரீதியிலான சான்றுகள் இல்லாத போதிலும், அவற்றிற்கு ஒரு சிறப்பு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சமூகத்தை சூழ்ந்து கொண்டுள்ள பிற்போக்குத்தனத்தின் ஆழம் எவ்வளவு என்பதை விளக்கும் நேரடியான உதாரணமாக அவை இருக்கின்றன. இந்த வீண் வதந்திகள், விசேடமாக பாலியல், தனிப்பட்ட தகவல்கள், ஏனைய இனங்களினால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளை உயர்த்திப் பிடித்தல் போன்றவை, பிரச்சாரங்களின்போது அவற்றிற்குள்ள புதுமையான தொடர்பாடற் சாத்தியங்களாகும். அவை பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வீட்டுக்கு வீடு, வாய்க்கு வாய் சில நொடிகளில் பரப்பப்படுகின்றது. பின்பு அவை உண்மையல்லவென எவ்வளவுதான் உறுதி செய்தாலும் அவை ஒருநாளும் சரியாக மாட்டாது.

அன்றாட வாழ்வின்போது இலங்கை சமூகத்தில நடக்கும் ஏதாவது சிறு மோதல் கூட இனவாத – மதவாத மோதலாக உருவெடுத்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து நிலவுகின்றது. சமூகம் என்ற வகையில் இப்போது நாம் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒருவரை அடித்துக் கொல்வது பாரதூரமான செயலாக இருப்பதைப் போன்றே அதைக் கொண்டு இனவாத மோதல்களுக்கு ஆரம்பத்தை எடுப்பது அதனையும் விட படுமோசமான நிலைக்கு இலங்கை சமூகம் தள்ளப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

மனித சமூகத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாததும், பொறுத்துக்கொள்ள முடியாததுமான சம்பவங்கள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வருகின்றன. சிலாபம் ஹேனவில பிரதேசத்தில் ஒரு பச்சிளம் பாலகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஒரு சில நாட்களே ஆகின்றன. கொலை செய்த அந்த நபர் தற்செயலாக தமிழராகவோ முஸ்லிமாகவோ இருந்திருந்தால் எப்படியான நிலமை உருவாகியிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  எம்மீது நாள்தோறும் சுமத்தப்படும் பிரச்சினைகள், நிச்சயமற்ற நிலை, துன்பம், வாழ்க்கைச் சுமை போன்ற இவை அனைத்தினாலும் சூழப்பட்டுள்ள நிலைமையில் அவற்றிற்கு காரணகர்த்தாக்களாக முஸ்லிம் மக்கள் உருவாக்கிக் காட்டப்படுகின்றனர். அவர்களது வியாபார நிலையங்களும் சமய நடவடிக்கைகளும். அல்லது அவர்களது கலாச்சாரம் காட்டப்படுகின்றது. இதற்கு முன்பு அந்தப் பாத்திரத்தில் தமிழ் மக்கள் அல்லது புலிகள் இருந்தனர். அக்காலத்தில் இலங்கை சமூகத்தின் சகலவித நோய்களுக்கும் காரணமாக இருந்தது புலிகள். நந்திக்கடல் வாவியில் அவர்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட கையோடு பொது எதிரியாக முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த அவலம் தொடர்ந்து நிலவுவது என்பது மீண்டும் மீண்டும் யுத்தங்களுக்குள் சிறைபட்டு பாரிய இரத்த ஆறுகளின் மீது நடக்க வேண்டிய நிலை உருவாகும். கின்தோட்டை பற்றி எரிந்த பின்பு சிங்கள மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் சொத்துக்கள், வீடுகள் கொளுத்தப்பட்டு உயிர்களும் அழிந்தன. அம்பாறையிலும் அதுதான் நடந்தது. இப்போது தெல்தெனிய பற்றி எரிந்து உயிர்களும் சொத்துக்களும் அழிகின்றன. பாடசாலைகள் மூடப்படுகின்றன. நாங்கள் இந்த இன்னல்களை வடக்கிலும் அளவிற்கதிகமாகவே அனுபவித்துள்ளோம். இவ்வாறு நாம், எந்நாளும் எங்களை வருத்தும், எம்மை சக்கையாக்கும் பிரித்துப் பார்க்கும் உண்மையான எதிரியை மறந்து எமது சகோதரர்களையே, ஒரேவிதமான தலைவிதியையும் – ஒரேவிதமான துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களையே எதிரிகளாக காண்கின்றோம். எமக்கு நாமே தீ வைத்துக் கொள்கின்றோம், கொலை செய்து கொள்கின்றோம். இதன் முடிவுதான் என்ன?

மிகப்பெரிய ஆபத்திலிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுவதற்காக இந்த கொலை செய்து கொள்வதற்கு, தீ வைப்பதற்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும். சிங்களவர்களாயினும், தமிழர்களாயினும், முஸ்லிம்களாயினும் எந்தவொரு இனக்குழுமத்தினதும் உரிமைகளுக்காக தோற்றி நிற்கவும் அவர்கள் மீதான அநியாயங்களுக்கு எதிராக எழுந்து நிற்கவும் வேண்டும். இனவாத வெறுப்புகளுக்குப் பதிலாக சமத்துவத்தையும், பகைமைக்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் எடுத்துக் கொண்டு நாம் அனுபவிக்கும் உண்மையான துன்பங்களுக்கு எதிரான போராட்டத்தின்பால் அணிவகுக்குமாறும் அதற்காக முன்னிலை வகிக்குமாறும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இலங்கையின ஒட்டுமொத்த முற்போக்கு மக்களிடமும் நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

ரவீந்திர முதலிகே

ஒருங்கிணைப்பாளர்

சம உரிமை இயக்கம்

2018 மார்ச் 0

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More