கிளிநொச்சியில் வேலையில்லா பிரச்சினை தலைவிரிதாடும் போது தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் இங்கு அதிகளவு நியமனம்பெற்று வருகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. பெருமளவுக்கு இளம் சமூகம் வேலையில்லா பிரச்சினையால் அதிகளவு பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் கிளிநொச்சியின் பல திணைக்களங்களில் பெரும்பான்மை சமூகத்தின் இளைஞர் யுவதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் இது கண்டனத்திற்கும் கவலைக்கும் உரிய விடயம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்
இளம் சமூகத்தின் மத்தியில் என்றுமில்லாத அளவுக்கு வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பெரும்பாலனவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். க.பொ.த சாதாரன தரம் மற்றும் உயர்தரக் கல்வியுடன் காணப்படுகின்ற புனர்வாழ்வுப்பெற்ற முன்னாள் போராளிகள் ஏராளமானவர்களும் தொழிலின்றி விரக்த்தியில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த சாதாரன தரம், மற்றும் உயர்தர தகமைகளுடன் ஆயிரக்கணக்கான இளம் சமூகத்தினர் வேலையின்றி காணப்படுகின்றனர்
இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள பல திணைக்களங்களில் சாதாரன வேலைவாய்ப்புக்களுக்கும் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் நியமிக்கப்பட்டு வருவது கிளிநொச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்ற முன்னாள் போராளிகள் உள்ளிட்ட இளம் சமூத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும், விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் புகையிரத திணைக்களம், வனவளத் திணைக்களம், மின்சார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்கள் என பல திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்கள் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. அது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயம்.
சாதாரன அரச தொழில் வாய்ப்புகளில் அந்தந்த மாவட்டங்களில் காணப்படுகின்ற திணைக்களங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்கின்ற போது அந்தந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இந்த மாவட்ட அடிப்படையிலான முன்னுரிமை தேசிய மற்றும் மாகாண மட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் இல்லையெனில் பின்தங்கிய மாவட்டங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதனை தவிர்க்க முடியாது போய்விடும். எனத் தெரவித்த சந்திரகுமார்
தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், தமிழ் மக்களாலும் கொண்டுவரப்பட்ட இந்த அரசும் இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதும் வேதனைக்குரியது.பெரும்பாலான தமிழ் இளம் சமூகத்தினர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்ற போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த முக்கிய விடயத்தில் கவனம் செலுத்தாமையும், தமிழ் பிரதேசங்களில் பெரும்பான்மையினத்தவர்கள் வேலைவாய்ப்புகளில் நியமிக்கப்படுகின்ற போது அதற்கு எதிராக நடவடிக்கையில் இறங்காமையும் வருதத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.