குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தீவக பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதனை தடுத்து நிறுத்த கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை சந்திக்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை மதியம் ஒன்று கூடிய பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியாக நடந்து சென்று ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவக பகுதிகளில் இருந்து இரவு வேளைகளில் வெளி பிரதேசங்களில் இருந்து செல்பவர்கள் மாடுகளை களவாடி கடத்தி செல்வதாகவும் அதனை கட்டுப்படுத்தி கடத்தல்கார்களையும் அவர்களுக்கு உதவி புரிவோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இன்று அதிகாலை மாடுகளை கடத்தி சென்ற வாகனம் ஒன்றினை துரத்தி சென்ற ஊரவர்கள் காவல்துறையினரின் உதவியுடன் வாகனத்தை மடக்கி பிடித்து மாடுகளை மீட்டதுடன் வாகன சாரதியை காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.