2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளையொட்டி இன்றைய தினம் JSAC நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ‘பெண்களின் மேம்பாட்டிற்கு வலுச் சேர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த 08 ஆம் திகதி அதாவது சர்வதேச மகளிர் தினத்தன்று எமது மகளிர் விவகார அமைச்சரினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. நான் அதில் கலந்து கொள்ள முடியாவிடினும் ஆசிச் செய்தியொன்றை அனுப்பியிருந்தேன். அதில் மகளிர் தின நிகழ்வுகள் ஏன் மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது என்பதனை அங்கு குறிப்பிட்டிருந்தேன். நியூயோர்க் நகரில் ஆண் பெண் இருபாலாருக்கும் சம அளவிலான சம்பளக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற போராட்டத்தில் குதித்த பெண்கள் சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்திய போராட்டத்தின் காரணமாக 1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி அந்த ஆலை நிர்வாகத்தினால் அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த நாளை நினைவுகூரும் வகையிலேயே மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
இன்று ‘சர்வதேச மகளிர் தினம்’ என்பது பலருக்கு பல விதமான அர்த்தங்களை ஏற்படுத்தி வருவதைக் காண்கின்றோம். முதலில் பெண்களின் சமஉரிமை பேணப்படுவதை வலியுறுத்தும் நாளாகப் பார்க்கப்படுகின்றது. இரண்டாவதாக ஆண்களுக்கு சவாலாக மாற வேண்டிய ஒரு நிலையைக் குறிப்பதற்கான நாளாக பெண்கள் பலர் இந் நாளை நினைக்கின்றார்கள். மூன்றாவதாக பெண்களுக்கு சிறப்புரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள் சிலர். நான்காவதாக பெண்களின் சுதந்திர நாளாகச் சிலர் இந் நாளைக் கணிக்கின்றார்கள். ஐந்தாவதாக பிள்ளைகள் பெறுவதைத் தவிர்ந்த தாம் செய்யும் அனைத்தையும் ஆண்கள் இனிச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய நாளாக இந்த நாளைப் பார்க்கின்றார்கள். மேலும் பல கருத்துக்கள் இந் நாளையொட்டி முன் வைக்கப்படுகின்றன.
சர்வதேச மகளிர் தின விழாக்களில் ஒவ்வொருவர் பேசும் கருத்துக்களைப் பரிசீலித்துப் பார்த்தீர்களானால் நான் கூறியவை விளங்கும்.
ஆனால் நாங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். இயற்கையின் படைப்பின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்மை பூரணப்படுத்தப்படுவது தாய்மையில். தாய்மையின் அதிவிசேட குணாம்சம் பரிவும், அன்பும், அரவணைப்புமே. ஆகவே இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் ஈடுபடுவதே பெண்மைக்கு அணிகலனாகும். அதைவிடுத்து ஆண்கள் செய்யும் அனைத்தையும் நாமும் செய்வோம் என்று ஒருவித சவாலாக வாழ்க்கையை எதிர்கொள்வது பெண்மைக்கு முரண்பாடுடையதாகப் பெண்களை மாற்றிவிடும். பெண்மை நிலையைப் பாதுகாத்துக் கொண்டே சம உரிமைகளைப் பெற பெண்கள் முன் வர வேண்டும்.
ஐரோப்பிய கண்டத்தில் மெர்சிடோனியா நகரில் பிறந்த ஒரு பெண் இந்தியாவில் புகையிரதம் மூலம் பயணம் செய்யும் போது தெரு மூலைகளிலும் பொது இடங்களிலும் காணப்பட்ட தொழுநோய்க்கு உட்பட்ட நோயாளிகளின் அன்றைய நிலையைக் கண்டு மனம் வெதும்பினாள். அந்தப் பெண் வெறும் ஐந்து ரூபாவுடன் கல்கத்தாவிற்குள் நுழைந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி மருத்துவத் துறையில் செவிலித்தாய்க்கான கற்கை நெறிகளை அங்கு கற்று அந்த நோயாளிகளைப் பராமரிக்கத் தொடங்கினாள். பாதிக்கப்பட்டோரை வீடுகளிலும் பொது மனைகளிலும் தங்க வைத்து எதுவித அருவருப்புமின்றி அவர்களைப் பாதுகாத்து அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து நீங்க அனைத்தையுஞ் செய்தாள். இதற்கான நொபெல் பரிசைப் பெற்றுக் கொண்டவர் தான் அன்னை தெரேசா அவர்கள். இவ்வளவு சிறப்பான சேவைகளை ஆற்றிய அன்னை தெரேசாவின் சொந்த இடம் எது என வினவப்பட்ட போது அவர் இந்தியா என உரத்துக் கூறினார். இந்தியா அவரின் புகுந்த இடமாகிற்று திருமணம் செய்யாத அன்னை தெரேசாவிற்கு. இவ்வாறாகப் போற்றப்படுகின்ற பெண்கள் வாழ்ந்த இடந்தான் இந்தியா. ஆனால் இன்று பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றிருக்கின்றது என்றால் அங்கு பெண்களின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை ஊகித்து அறிந்து கொள்ள முடியும். பெண்களுக்குச் சமஉரிமைகள் கொடுக்கப் பட வேண்டும். ஆண்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும்.
ஆனால் பெண்கள் ஆண்களாகவோ ஆண்கள் பெண்களாகவோ மாற எத்தனிக்கக்கூடாது. இயற்கை அவர்களுக்கு கொடுத்த சிறப்பியல்புகளைப் பேணிக் கொண்டே இருசாராரும் சம உரிமைகளுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். ஆண் பெண்களிடையே போட்டி பொறாமைகள் எழக்கூடாது. சம உரித்துக்கள் வேறு இருவரும் சமமே என்று நினைத்து முரண்படுவது வேறு, ஆண்கள் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு சமமாக முடியாது. தாய்மை பெண்மையின் சிறப்பம்சம். அதனை ஆண்கள் தட்டி எடுத்துச் செல்ல முடியாது. எனவேதான் ஆண்களைச் சவாலாகக் கணிப்பதும், சிறப்புரிமைகள் கோரும் நாளாக மகளிர் நாளைக் கணிப்பதும், சுதந்திரம் வேண்டும் நாளாக அத் தினத்தைக் கணிப்பதும் உடல் ரீதியான சமபலத்தை எதிர்பார்த்து நடந்து கொள்வதும் ஒருவித தாழ்வு மனப்பான்மையையே எடுத்துக்காட்டுகின்றன.
யதார்த்த நிலைக்கு எதிர்நிலையொன்றை ஏற்படுத்துவதாகவோ அல்லது எதிர்த் தாக்கத்தை உண்டுபண்ணுவதாகவோ பெண்மை அமையக்கூடாது. அன்பு, பண்பு, அமைதி, பொறுமை என்பன பெண்மையின் அணிகலன்கள். அவற்றிற்கு அமைய சம உரிமைகளுடன் அவர்களை வாழ வைப்பதே பெண்மைக்கு நாம் செய்யும் ஆராதனையாகும்.
இதனைப் பலர் பலவிதமாக விமர்சிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பெண் ஆணாக மாறுவதில் பெண்மைக்கும் அழகில்லை. ஆண்மைக்கும் அழகில்லை. அதே நேரம் பெண் ஒடுக்குமுறை ஆண் மக்கள் மத்தியிலே இன்றும் இருந்து வருகின்றது என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாது.
இந்தப் பெண் ஒடுக்குமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை ஆராய வேண்டுமாயின் நாம் பின்னோக்கிக் கற்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆரம்பத்தில் எமது மனித சமூகம் வேட்டைச் சமூகமாகவே வாழ்ந்து வந்தது. வேட்டைச் சமூகத்தில் பெண் ஆணை விட அந்தஸ்தில் கூடியவளாக முடிவுகளை எடுக்கின்ற வல்லமைகளை உடையவளாக விளங்கினாள் என்று அறிகின்றோம். அக் காலத்தில் ஏற்பட்ட நாகரீகத்தின் உச்சத் திருப்புமுனைக் கண்டுபிடிப்பாக நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நெருப்பை அணையாது பாதுகாக்கின்ற முக்கிய பொறுப்பை ஆண் பெண்ணிடம் கொடுத்திருந்தான். அவ்வாறு கையளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பெண் அந்த நெருப்பை இரவு பகல் அணையாது பாதுகாக்கத் தொடங்கினாள். அன்று தொடங்கிய நெருப்புடனான தொடர்பு இன்று வரை பெண்ணையும் நெருப்பையும் ஒன்றாகவே இணைத்துப் பார்க்க வைத்திருக்கின்றது.
வேட்டைச் சமூகத்தில் தனியுடைமைக் கொள்கைகள் காணப்படவில்லை. மாறாக அந்தச் சமூகம் ஒரு பொது உடைமைச் சமூகமாகவே காணப்பட்டது. நெருப்பின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து வேட்டைச் சமூகம் வேளாண்மைச் சமூகமாக மாற்றம் பெற்ற போது அங்கு பொது உடைமைச் சமுதாயக் கொள்கை நீங்கி தனியுடைமைச் சமுதாயக் கொள்கைகள் தலைதூக்கத் தொடங்கின. ஒவ்வொரு குடும்பமும் தமக்கென தனியான ஒரு இடம்,தனியாகப் பயிரிடும் நிலம், தனியான உணவு தேடும் முறை என்று தமக்கென ஒவ்வொன்றையும் தனியாகப் பெற்றுக் கொள்கின்ற முறை நடைமுறைக்கு வந்த போது ஒருவனுக்கு ஒருத்தி என்ற தனியுடைமைக் கொள்கையும் வலியுறுத்தப்பட்டது. இங்குதான் பெண்ணின் உரிமைகள் ஆணினால் பறித்துக் கொள்ளப்பட்டதை அவதானிக்கின்றோம்.. அனைவருக்குமாக ஒருவன் சொத்து சேகரிக்கும் தன்மை அல்லது அனைவரும் சேர்ந்து ஒருவனுக்காக சொத்துச் சேகரிப்பது என்ற சேகரிப்பு முறைமை சொத்தை முன்நிறுத்தி ‘என் சொத்து’ என்பதனுள் பெண்களையும் அடக்கிவிட்டார்கள் ஆண்கள்.
தனியுடைமைக் கொள்கைகளின் கீழ் சொத்து சொத்து என அலைந்த மனிதன் பெண்ணையும் சொத்து எனவே வரையறை செய்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் ஆண் பயன்படுத்திய பல் வகைப் பொருட்களில் பெண் எனப்படுபவளும் ஒன்று, அதாவது பெண்ணும் ஒரு நுகர் பொருளே என வரையறுத்தான்.
இவ்வாறு பெண்களை நுகர் பொருளாக மாற்ற முற்பட்ட மனிதன் பெண்ணைத் தனது உடமைப் பொருளாக்கி அவளின் தனித்துவத்தை மழுங்கடித்துவிட்டான். தன் பாவிப்புக்குரியதாகவே பெண்களை மாற்றினான். இதனால் பெண்களின் தனித்துவம் பறிபோயின. சுதந்திரம் பறிபோயிற்று. அந்தத் தனித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே பெண்ணுரிமை வழங்கலின் முக்கிய குறிக்கோள்.
இன்றைய நிலையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆண் பெண் இருவரும் சம உரித்துடையவர்கள் என்ற ஒரு சமத்துவக் கருத்தை வெளிப்படுத்த இடமளித்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என்று எவரும் கூறமுடியாது. காரணம் பெண் என்பவள் அவளின் தாய்மைக் குணாம்சத்தினால் ஆணிலும் பார்க்க மாண்பும் மதிப்பும் பெற்றவள் ஆகின்றாள்.
என்றாலும் இன்றும் பெண் எனப்பட்டவள் ஆண்களின் அடிமைத்தளையில் இருந்து முற்றாக விடுபட்டுள்ளாள் என்று கூறமுடியாது. பெண்ணானவள் அச்ச உணர்வின்றித் தனியாக நடமாடக் கூடியவளாக இன்னும் மாற்றம் பெறவில்லை. எனவே ‘பெண்களின் மேம்பாட்டிற்கு வலுச்சேர்ப்போம்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்ற இது போன்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் உதட்டளவில் கூறப்படுகின்ற உறுதி மொழிகளாக இல்லாது பெண்களைக் கௌரவிக்கவும் பெண் முயற்சியாளர்களைப் பாராட்டவும், பெண் சுதந்திரத்தைப் போற்றவும் ஏற்ற ஒரு சூழலை உருவாக்குவதாக அமைய வேண்டும். அவர்கள் சுமூகமான வாழ்க்கையை முன்னெடுக்க வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வுகளாக அவை அமைய வேண்டும் என வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடமாகாணம்.