குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் அரச படையினர் , அமெரிக்கப் படையினர் மற்றும் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட போது இவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினர் இரகசிய தடுப்பு முகாம்களை இயக்கி வந்ததாகவும் இதில் சித்திரவதைகள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்யப்படும் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருப்பதற்கான நியாயமான சான்றுகள் காணப்படுவதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அமெரிக்கப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகினாலும் அவர்கள் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் தண்டிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.