குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில். தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திய இருவர் வர்த்தக நிலையத்தில் 12 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சாவகச்சேரி கிராம்பு பகுதியிலையே இச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அன்றையதினம் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சாவகச்சேரி நகருக்கு சென்றிருந்தார். அவ்வேளை வர்த்தக நிலையத்தினை பார்த்து கொள்ளுமாறு கூறி முதியவர் ஒருவரை வர்த்தக நிலையத்தில் நிறுத்தி விட்டு சென்றிருந்தார்.
முதியவர் வர்த்தக நிலையத்தில் நின்றிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திய அவர்கள் , கடைக்குள் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது எனவும் கடை சோதனையிட வேண்டும் எனவும் கூறி முதியவரை அங்கிருந்த கதிரையில் அமர சொல்லி விட்டு கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.
இறுதியில் மேசை லாச்சியை சோதையிட வேண்டும் என சோதனையிட்டனர். பின்னர் கடையில் கஞ்சா இல்லை என கூறிய இருவரும் கடைக்கு வெளியில் சென்று மோட்டார் சைக்கிளில் செல்ல ஆயத்தமான வேளை குறித்த கடைக்கு பொருட்களை வாங்க வந்த பெண்மணி ஒருவரிடம் விலாசம் விசாரிப்பது போல் அருகில் சென்று அவரின் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளனர்.
குறித்த பெண் தனது சங்கிலியை கைகளால் பிடித்துக்கொண்டு கூக்குரல் எழுப்ப குறித்த நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். அதன் பின்னர் கடையில் நின்ற முதியவர் கடை மேசை லாச்சியை திறந்து பார்த்த போது லாச்சிக்குள் இருந்த பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டதை அறிந்துள்ளார்.
அது தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில் , வியாபர பணம் 12 ஆயிரம் ரூபாய் மேசை லாச்சிக்குள் இருந்தது என தெரிவித்தார்.