பனாமா பேப்பர்ஸ் ஊழலுக்கு காரணமான மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனம் மூடப்பட்டுள்ளது. பனாமாவில் கடந்த 1977-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை ஆரம்பித்திருந்ததுடன் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்தது. இந்த சட்ட நிறுவனம் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை பதுக்கி வைத்திருந்தநிலையில் இந்த முறைகேடுகள் பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகியிருந்தது
இதைத் தொடர்ந்து மொசாக் பொன்சேகா நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது மொசாக் பொன்சேகா நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இதிலிருந்து தங்களால் மீள முடியாததால் நிறுவனம் மூடப்படுவதாகவும் இந்த மாத இறுதியில் எங்கள் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது