வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிரான வழக்கில் பத்து வருடங்களின் பின்னர் இவருக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தண்டனைக் கைதியான இவருக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் மனதளவில் பெரும் பாதிப்படைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வயோதிபரான இவருக்கு சிறை வாழ்க்கையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையும் சிறைச்சாலையுமாக இருந்து வந்த இவர் கடைசியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்ததாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.