ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப் பேரவை அறிவுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரச படைக்கும் தலிபான்களுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அந்த நாட்டில் மூன்றில் ஒரு பகுதி தலிபான்களின் வசம் உள்ளது.
இந்தநிலையில் அண்மையில் ஆயுதங்களைக் கைவிட்டால் தலிபான் அமைப்பை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். எனினும் அதற்கு தலிபான்கள் தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது
இந்தநிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் அந்த அமைப்பு நிபந்தனையற்ற வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் எனவும் இதன்மூலம் மட்டுமே ஆப்கானில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் தலைவர் காரல் ஜன் கஸ்டப் வான் ஓஸ்டோரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்